பழனி முருகன் கோவிலில் தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கி உள்ளதால் நேற்று தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-29 19:00 GMT

பழனி முருகன் கோவில்

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடிகொண்ட அறுபடை வீடுகளில் பழனி 3-ம் படைவீடாகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இதில், தைப்பூச திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வந்து முருகனை வேண்டி செல்கின்றனர். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஜனவரி மாத தொடக்கத்தில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.

இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 27-ந்தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் முடிந்த பின்பு 48 நாட்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சுவாமியின் பூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

3 மணி நேரம் காத்திருப்பு

இதற்கிடையே பழனி தைப்பூச திருவிழா நேற்று பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டியும் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

காலை முதலே அடிவாரம், கிரிவீதிகள், மலைக்கோவில், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தரிசன வழிகள், வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து கோவிலுக்கு சென்றனர். அதன்படி சுமார் 3 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்