பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-05-14 18:45 GMT

பழனி முருகன் கோவில்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். இதேபோல் மயில்காவடி, தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

அந்தவகையில் பங்குனி உத்திர திருவிழா முடிந்த போதிலும், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து பழனியில் வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக வாரவிடுமுறை, சுபமுகூர்த்த நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.

அதன்படி தற்போது கோடை விடுமுறை என்பதால், கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

அலைமோதிய பக்தர்கள்

இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். இதனால் மலைக்கோவில் மட்டுமின்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கூட்டம் காரணமாக பொது, கட்டளை, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகள், அன்னதான கூடம் ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். எனவே சுமார் 2 மணி நேர காத்திருப்புக்கு பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேர்ந்தது.

அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழிகளான படிப்பாதை, யானைப்பாதை வழியாக பக்தர்கள் சாரை, சாரையாய் சென்றனர். மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் குவிந்ததால் அங்கும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதில் ரோப்கார் நிலையத்தின் வெளிப்பகுதி வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

பழனிக்கு நேற்று வெளியூர் பக்தர்கள் கார், வேன்களில் அதிகமாக வந்தனர். எனவே அடிவாரம், கிரிவீதி, பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக சாலையோரத்தில் கார்களை நிறுத்தி சென்றதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

போதிய போலீசார் பாதுகாப்பு பணிகளில் இல்லாததால் வெகுநேரம் நெரிசல் காணப்பட்டது.இதனால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். எனவே வார விடுமுறை நாட்களிலாவது கூடுதல் போலீசாரை அடிவாரம், மலைக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்