புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை:பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

Update: 2022-09-24 20:25 GMT


புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

புரட்டாசி மாத சனிக்கிழமை

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். அதையொட்டி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள், தேவியாருடன் எழுந்தருளி காட்சி அளித்தார். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.

அதேபோன்று திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வழித்துணை பெருமாளும், சக்கரத்தாழ்வாரும் காட்சி அளித்தனர். நரசிங்கத்தில் உள்ள யோகநரசிம்மர், நரசிங்க வல்லி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மேலும் தெற்கு கிருஷ்ணன்கோவில், வடக்கு நவநீதகிருஷ்ணன் கோவில், மதனகோபாலசுவாமி கோவில், அண்ணாநகர் சேவுக பெருமாள் கோவில், வண்டியூர் பெருமாள் கோவில், திருப்பாலை மற்றும் தல்லாகுளம் கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் சாமி காட்சி அளித்தார். இதையொட்டி கோவில்களில் அதிகாலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களை கட்டுப்படுத்த தடுப்புக்கள் அமைக்கப்பட்டது. பக்தர்கள் வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

கள்ளழகர் கோவில்

மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலையிலிருந்து மாலை வரை பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் மூலவர் சுந்தரராஜபெருமாள், தேவியர்கள் மற்றும் உற்சவர் கள்ளழகர், தேவியர்கள், துளசி பூ மாலைகள் அலங்காரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்தனர். சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் நீண்டவரிசையில் சென்று வணங்கினர். மேலும் இக்கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு மாலைகள், சந்தனம், சாத்தி வணங்கினர். பின்னர் தீபாராதனைகள் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்