கோவில் விழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
மேல கடையநல்லூர் தேவி கருமாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் உள்ள மேல கடையநல்லூர் தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, மாலை நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மேலும் புஷ்பாஞ்சலி, சுமங்கலி பூஜை, அக்னிச்சட்டி ஊர்வலம், அம்மன் வீதிஉலா, குற்றால தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வருதல், சிறப்பு அபிஷேகம், முளைப்பாரி வீதிஉலா உள்ளிட்டவை நடந்தது. நேற்று அதிகாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். தொடர்ந்து அம்மனுக்கு படப்பு தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.