இணையதளத்தில் பதிவு செய்து ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
ஆடி மாத வழிபாட்டையொட்டி சென்னையில் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களுக்கு பக்தர்களை அழைத்துச்செல்ல இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.;
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. ஆன்மிக மாதம் என்றும் ஆடி போற்றப்படும். அந்த அளவுக்கு ஊரெங்கும் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் இந்த மாதத்தில் களைகட்டும். அதிலும் குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும். இதை கருத்தில் கொண்டு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்த முறை பக்தர்களுடன், இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து ஆன்மிக சுற்றுலா என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. கடந்த ஆண்டு இந்தத்திட்டம் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டது. தற்போது ஆடி மாத பிறப்பையொட்டி சென்னையில் 2 பிரிவாக இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வருகிற 17-ந்தேதி ஆடி மாதம் பிறக்கிறது.
முதல் பிரிவில், முக்கிய கோவில்களான பாரிமுனை காளிகாம்பாள், ராயபுரம் அங்காளப்பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரிய பாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காளப்பரமேஸ்வரி, திருமுல்லைவாயல் திருவுடையம்மன், பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் ஆகிய 10 கோவில்களுக்கு பக்தர்களை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் ஆன்மிக பயணத்திற்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2-வது பிரிவாக மயிலாப்பூர் கபாலீசுவரர், முண்டக கண்ணியம்மன், கோலவிழியம்மன், தியாகராயநகர் ஆலயம்மன், முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சியம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உணவு, தரிசன ஏற்பாடுகளை துறை சார்ந்த அதிகாரிகள் செய்கிறார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் சுற்றுலாத்துறை இணையதளத்தில் விண்ணப்பித்தால் அவர்கள் விரும்பிய நாளில் அழைத்து செல்லப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.