வளர்ச்சி திட்டப் பணிகள்

நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் ஆய்வு செய்தார்

Update: 2022-12-15 18:45 GMT

நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளருமான அருண்ராய் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகை நகராட்சிக்குட்பட்ட டாடா நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தடுப்பணை கட்டும் பணி

தொடர்ந்து வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பணை கட்டும் பணி, கிராம செயலகம் கட்டிடம் கட்டும் பணி, அம்மா கவுண்டர்காடு கிராமம் முதல் இளந்தோப்பு கிராமம் வரை வீட்டிற்கு வீடு குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள், மிதிவண்டி நிழலகம் அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குளம் தூர்வாரும் பணி, நகராட்சி அரசு ஆஸ்பத்தி சாலையில் புதிய சுகாதார வளாகம் கட்டும் பணி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

தொடர்ந்து வேளாங்கண்ணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரை இருப்பு குறித்தும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் கீழையூர் வட்டாரத்தில் வரப்பில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். இதுபோல் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேளாண் இணை இயக்குனர் அகண்ட ராவ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்