கல்லல் ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்

கல்லல் ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என தலைவர் சொர்ணம் அசோகன் கூறினார்.

Update: 2022-09-13 17:28 GMT

காரைக்குடி, 

கல்லல் ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என தலைவர் சொர்ணம் அசோகன் கூறினார்.

ஒன்றிய குழு கூட்டம்

கல்லல் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் சொர்ணம் அசோகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். மேலாளர் சுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

உறுப்பினர் முத்தழகு:- கடந்த 6 மாத காலமாக அரசால் வழங்கப்பட்டு வந்த திருமண உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டது. அதனை மீண்டும் வழங்க வேண்டும். விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி உள்ளது. எனவே விவசாய வேலைகள் பாதிப்படையாமல் இருக்க 100 நாள் வேலை திட்டத்தை 2 மாதம் நிறுத்தி வைக்க வேண்டும்.

ஆணையாளர்:- திருமண உதவி தொகை திட்டத்தின் கீழ் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பங்கள் வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம், திருமண உதவி திட்டம் இரு பிரச்சினைகளுக்கும் அரசுதான் முடிவு எடுக்க முடியும்.

சந்தை, பஸ் நிலையம்

சங்கு உதயகுமார்:- மன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் அடிப்படையில் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற வேண்டும். உறுப்பினர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைய வேண்டும். அப்போதுதான் மக்கள் பணி சிறப்பாக இருக்கும். ஒன்றிய குழு கூட்டத்திற்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க வேண்டும். அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியினை நமது ஒன்றியத்திற்கு பயன்படுத்திட முயற்சிக்க வேண்டும். கல்லலில் நீண்ட காலமாக நிலவிவரும் சந்தை, பஸ் நிலைய பிரச்சினைக்கு தீர்வு எப்போது? தலைவர் சொர்ணம் அசோகன்:- ஊரக வளர்ச்சி துறை அமைச்சரிடம் இது குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளோம். விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

சங்கீதா:- எனது வார்டில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடி தீர்வு காண வேண்டும். அபிநயா:- பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டத்தின் கீழ் எனது வார்டு உள்ளிட்ட ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட உள்ளதற்கும், மணிமுத்தாறு பாலம் மராமத்து பெரிச்சிக்கோயில் பகுதியில் சிறு பாலம் ஆகிய பணிகளுக்கும் நன்றி.

திட்ட பணிகள்

தலைவர் சொர்ணம் அசோகன்:- ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.1 கோடியும், 15-வது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ரூ.1 கோடி 3 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் உறுப்பினர்களின் ஆலோசனை பெற்று வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பருவகால மழையினை எதிர்கொள்ளும் விதமாக வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட உள்ளன. நீர்நிலைகள் கரைகள் பலப்படுத்தப்படும். கண்மாய் கழுங்குகளில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும். குடிநீர் பகிர்மான குழாய்கள் விரிவுபடுத்தப்பட்டு புதிய குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்படும்.

ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் மேம்பாட்டு வசதிகள் அதிகரிக்கப்படும். பேவர் பிளாக் மூலம் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். சுகாதார பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இவ்வாறு கூட்டம் நடைபெற்றது. பின் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முடிவில் உறுப்பினர் ஆரோக்கியம் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்