தரிசு நிலங்களை மேம்பாடு செய்யும் பணி
காரியாபட்டி அருகே தரிசு நிலங்களை மேம்பாடு செய்யும் பணியை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஆனந்தகுமார், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே தரிசு நிலங்களை மேம்பாடு செய்யும் பணியை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஆனந்தகுமார், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தரிசு நிலம்
காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் முடுக்கன்குளம் பகுதியை தரிசு நில மேம்பாட்டு குழு மூலமாக முதற்கட்டமாக 16 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தரிசு நிலங்களை சுத்தம் செய்து போர்வெல் அமைத்து 10 எச்பி குதிரை திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார் மற்றும் சோலார் பேனல் அமைக்கப்பட்டு விவசாயம் செய்ய ஆயத்த நிலையில் இருந்து வருகிறது.
தரிசு நிலங்களை மேம்பாடு செய்துவரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஆனந்தகுமார், கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதிக மகசூல்
பின்னர் முடுக்கன்குளம் பகுதியின் தரிசு நில மேம்பாட்டு குழு தலைவர் அருள்மொழிவர்மனிடம் கலெக்டர் மேகநாதரெட்டி இந்தப்பகுதியில் மண்ணின் தன்மைக்கேற்ப விவசாயம் செய்தால்தான் அதிகமான மகசூல் எடுக்க முடியும் என்று எடுத்துரைத்தார். அப்போது அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் எஸ்.நாராயணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் உத்தண்டராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், முடுக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வாலை முத்துச்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.