சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை கண்டறிய பகுத்தறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சமூக வலைத்தளங்களில் வதந்தி, போலி செய்திகளை கண்டறிவதற்கு மாணவர்கள் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
விழிப்புணர்வு குறும்பட போட்டி
சென்னை போலீஸ் துறை சார்பில் 'போதை பொருட்களுக்கு எதிரான தலைப்புகளில் விழிப்புணர்வு குறும்பட போட்டி நடத்தப்பட்டது. இதில் 300 குறும்படங்கள் பங்கேற்றன. இவற்றில் முதல் 4 சிறந்த குறும்படங்களை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தேர்வு செய்தார். வெற்றி பெற்ற இந்த குறும்படங்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர், முதல் இடம் பிடித்த குறும்பட குழுவினருக்கு ரூ.1 லட்சம், 2-வது இடம் பிடித்த குறும்பட குழுவினருக்கு ரூ.50 ஆயிரம், 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்த குழுவினருக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு
போதைப் பொருட்களுக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கைகளை 'காமிக்ஸ்' வடிவில் சித்தரித்து தயாரிக்கப்பட்ட புத்தகத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வரும் உதவி கமிஷனர்கள் வீரக்குமார், மகிமை வீரமய்யா, வரதராஜன், ராயப்பன் யேசுநேசன். இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸ் பிரிவுகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
பகுத்தறிவை வளர்க்க வேண்டும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய தலைமையில் போதை பொருட்கள் தடுப்பு முயற்சியை தொடர்ந்து எடுத்து வருகிறோம். இதற்கு மாணவ-மாணவிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இப்போது 'வாட்ஸ் அப்' யுகம். அதில் எந்த தகவல், பதிவு வந்தாலும் உடனடியாக பகிர்ந்து கொள்கிறோம். இதனால் நிறைய சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வருகிறது. 'வாட்ஸ்- அப்', சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி உண்மையானதா? வதந்தியா? போலியானதா? என்பதை கண்டறிவதற்கு பகுத்தறிவை மாணவ-மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உண்மையான செய்தி சென்றடைய தாமதம் ஆகிறது. வதந்தி மற்றும் போலி செய்திகள் சீக்கிரம் சென்றடைந்து விடுகிறது. இதனால் நிறைய பிரச்சினைகள் வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ரம்யா பாரதி உள்பட போலீஸ் அதிகாரிகள், திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.