தூர்வாரும் பணியில் முறைகேடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

தூர்வாரும் பணி குறித்து இதுவரை யாரும் குறைசொல்லவில்லை எனவும், முறைகேடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் எனவும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.

Update: 2022-05-27 20:12 GMT

தஞ்சாவூர், மே.28-

தூர்வாரும் பணி குறித்து இதுவரை யாரும் குறைசொல்லவில்லை எனவும், முறைகேடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் எனவும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்றுகாலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவதுதஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு குறுவை பருவத்தில் 22 ஆயிரத்து 451 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கடந்த 24-ந் தேதி திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு 70 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை பருவத்திற்கு தேவையான நெல் விதைகள் 163 டன் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான யூரியா 4,361 டன்னும், டி.ஏ.பி. 1,216 டன்னும், பொட்டாஷ் 618 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 2,061 டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் டெல்டா பகுதி விவசாயிகளின் சாகுபடிக்காக 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

சம்பா அறுவடைக்காக இதுவரை 618 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, தற்போது 41 கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த பருவத்தில் இதுவரை 7 லட்சத்து 29 ஆயிரத்து 368 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 396 விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பயன் அடைந்துள்ளனர்.விற்பனை செய்யப்படும் நெல்லிற்கு உண்டான தொகை விவசாயிகளுக்கு மின்னணு வங்கிப்பண பரிவர்த்தனை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1,487 கோடி வழங்கப்பட்டுள்ளது. தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 30 இடங்களுக்கு மேல் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். யாரும் புகார் தெரிவிக்கவில்லை. தூர்வாரும் பணியில் முறைகேடு நடந்துள்ளது என பொதுவாக தெரிவிக்காமல் எந்த இடத்தில் நடந்த பணியில் முறைகேடு நடந்து இருக்கிறது என தெரிவித்தால் விசாரணை நடத்தப்படும்.

புகார் தெரிவிக்கலாம்

170 பணிகள் குறித்து விவசாயிகளுக்கு உடனடியாக வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்படும். எந்த பணி சிறப்பாக நடைபெறவில்லையோ அல்லது முறைகேடு நடந்து இருந்தாலும் புகார் தெரிவிக்கலாம். அப்படி புகார் வரும்பட்சத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்