ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியான பிலிப்பைன்ஸ் பெண்ணின் உடல் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு

ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியான பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணின் உடல் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-06-25 20:44 GMT

சேலம், 

பிலிப்பைன்ஸ் பெண் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ரெச்சல்லா ஆனிமரி (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரான கேரளாவை சேர்ந்த டாக்டர் ஹரிஷ் என்பவருடன் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது சேலம் மாவட்டம் காருவள்ளி பகுதியில் வந்த போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து ரெச்சல்லா ஆனிமரி பலியானார்.

இதையடுத்து அவருடைய உடலை தர்மபுரி ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெச்சல்லா ஆனிமரி இறந்த விவரம் குறித்து தூதரகம் வழியாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய சகோதரி நோரா சேலம் வருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இந்தியா வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.

அனுப்பி வைப்பு

இந்தியாவில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் வழியாக தொண்டு நிறுவனம் மூலம் ரெச்சல்லா ஆனிமரி உடலை அனுப்பி வைக்கக் கோரி உறவினர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் மும்பையில் செயல்பட்டு வரும் ஜான் பிண்டோ என்னும் தொண்டு நிறுவனம் மூலம் ரெச்சல்லா ஆனிமரி உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் அதுதொடர்பான கடிதத்தை சேலம் ரெயில்வே போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ரெச்சல்லா ஆனிமரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பிற்பகலில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறும்போது, 'பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ரெச்சல்லா ஆனிமரியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கிருந்து விமானம் மூலம் அவரது சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல தூதகரம் நடவடிக்கை எடுக்கும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்