பேரணிக்கு அனுமதி மறுப்பு: கடலூரில், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-02-11 01:46 IST

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பெரியார் சிலை அருகில் இருந்து பழைய கலெக்டர் அலுவலகம் வரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பேரணியாக சென்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

பேரணிக்கு அனுமதி மறுப்பு

அதன்படி நேற்று மாலை கடலூர் பெரியார் சிலை அருகில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஒன்று திரண்டு பேரணியாக செல்ல ஆயத்தமானார்கள். இது பற்றி அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேரணியாக செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.

ஆனால் அரசு ஊழியர் சங்கத்தினர், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பேரணியாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டனர். அதற்கு போலீசார் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து அங்கேயே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை தலைவர்கள் வெங்கடாசலபதி, கவியரசு, இணை செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், குடியிருப்போர் சங்கம் மருதவாணன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மனோகரன், காசிநாதன், பழனி, கருணாகரன், அங்கன்வாடி பணியாளர் சங்கம் அனுசுயா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் பொற்செழியன், பாபு, ராமர், சின்னசாமி, சுப்பிரமணி, பிரசாந்த், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் பிரபாகரன் நிறைவுரையாற்றினார். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்