காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிமேகலா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினா் தமிழ்மணி சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கோஷங்களை எழுப்பினர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அமல்படுத்தப்படவுள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை 40 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தை நடத்தி வரும் சத்துணவு ஊழியர்களிடம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தியும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பான மனுவினை கொடுத்துவிட்டு, அதனை தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி விட்டு வந்து கலைந்து சென்றனர்.
குன்னம் தாலுகா, பேரளி வடக்கு தெருவை சேர்ந்த ராகவன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். அதனை வாங்க வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்று கூறியிருந்தார்.
35 கிலோ அரிசி வழங்கக்கோரி...
குன்னம் தாலுகா, பெரியம்மாபாளையத்தை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தாங்கள் இதுவரை பி.எச்.எச்.-ஏ.ஏ.ஒய். ரேஷன் கார்டு மூலம் ரேஷன் கடையில் 35 கிலோ அரிசி பெற்று வந்தோம். தற்போது எங்களது ரேஷன் கார்டுகளை என்.பி.எச்.எச். கார்டுகளாக மாற்றி விட்டனர். இதனால் எங்களுக்கு 20 கிலோ அரிசியே வழங்கப்படுகிறது. மேலும் இதனால் எங்களுக்கு அரசின் சலுகைகள் மறுக்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் எங்களுக்கு மீண்டும் 35 கிலோ அரிசி வழங்க ரேஷன் கார்டை பி.எச்.எச்.-ஏ.ஏ.ஒய். கார்டுகளாக மாற்றி கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மொத்தம் 279 மனுக்கள்
கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 279 மனுக்களை பெற்றார். முன்னதாக அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 19 பேருக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 941 மதிப்பிலான மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தக்க செயலிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள செல்போன்களும், 9 மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு தொடங்கி ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பில் திருமண நிதியினை வரவு வைத்த கணக்கு புத்தகங்களையும் வழங்கினார். மேலும் விண்கற்களை பற்றி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்து, பெங்களூரில் இயங்கும் தனியார் தன்னார்வ அமைப்பின் சார்பில் பாராட்டு சான்று பெற்றுள்ள இலந்தங்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளை கலெக்டர் கற்பகம் வாழ்த்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரியதர்ஷினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.