தானிய மதிப்பு கூட்டுதல் குறித்து செயல்விளக்கம்
பழங்குடியின விவசாயிகளுக்கு தானிய மதிப்பு கூட்டுதல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உள் மாநில அளவிலான சிறுதானிய பயிர்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த கண்டுணர் சுற்றுலா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோவையில் நடைபெற்றது. பயிற்சியில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய சிறுதானிய பயிர்களான திணை, சாமை மற்றும் கேழ்வரகு முதலியவற்றை அங்கக முறை சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் திணை, சாமை உள்ளிட்ட தானிய வகைகளின் மதிப்பு கூட்டுதல் குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
இதேபோல அங்கக முறையில் காபி சாகுபடி மற்றும் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கோத்தகிரி அருகே உள்ள கடினமாலா மற்றும் அரக்கோடு பகுதியை சார்ந்த பழங்குடியின விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.