ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-08-14 18:45 GMT


பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குறுவை நெற்பயிர்

நாகை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திர போஸ் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். டெல்டா மாவட்டங்களில் கருகும் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற உடனே தண்ணீர் திறக்க கர்நாடக அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களை உடனே கணக்கீடு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்

இதேபோல் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர்கள் அபூபக்கர், முத்தையன் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் மாரிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

தலைஞாயிறு

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில விவசாய சங்க துணை தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழுவை சேர்ந்த லதா, நிர்வாகிகள் வேணு, அலெக்சாண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்