ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-08-23 18:04 GMT

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சிவகங்கையில் நடைபெற்ற 10-வது மாநில மாநாட்டின் தீர்மானத்தின்படி, மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பெருந்திரள் முறையீடு இயக்கம் நடந்தது. முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீதான முந்தைய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்து, அவரை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும். வளர்ச்சித்துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த ஆய்வுகள், விடுமுறை தின ஆய்வு, இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்-அப், காணொலி ஆய்வுகளை முற்றிலும் கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு 25 ஊராட்சிகளை உள்ளடக்கிய புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான மரியதாஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்ட இணை செயலாளர்கள் கவுதமன், சுகதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்