முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற பிரச்சினையின் காரணத்தினால் ராணுவ வீரர் பிரபு என்பவரை சிலர் அடித்து கொலை செய்தனர்.
ராணுவ வீரரை கொலை செய்த நபர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் சுபேதார் மேஜர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டத்தின் 14 முன்னாள் ராணுவ வீரர்களின் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மறைந்த ராணுவ வீரர் பிரபுவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவர்கள் நடத்திய ஆர்ப்பட்டத்த்தில் மறைந்த ராணுவ வீரர் பிரபுவை கொலை செய்த நபர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.