பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
வெளிப்பாளையம்:
நாகையில் பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் (பி.எம்.எஸ்.) சார்பில் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் நாகை திட்டத் தலைவர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை கோட்ட தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் பழனி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்களின் எதிர்கால பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில், முத்தரப்பு ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பஞ்சப்படி உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட அனைத்துப் பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும். மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி கோட்டங்களில் பணிபுரியும் மின் தொழிலாளர்கள், கணக்கீட்டாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.