எம்.சி.சம்பத் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிகடலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

எம்.சி.சம்பத் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கடலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-03 18:45 GMT

எம்.சி.சம்பத் மீது வழக்கு

கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத்துக்கும், அவரது நேர்முக உதவியாளராக இருந்த மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த குமாருக்கும் பணம் கொடுக்கல், வாங்க லில் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக குமாரின் மாமனாருடன் நடந்த பேச்சுவார்த்தையில் அவரையும், அவரது மனைவி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்பட 14 பேர் மீது பண்ருட்டி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும் நேற்று கடலூர் அண்ணா பாலம் அருகில் உள்ள சிக்னல் பகுதியில் அ.தி.மு.க.வினர் கருப்பு பட்டை அணிந்து ஒன்று திரண்டனர்.

தொடர்ந்து அவர்கள், மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில மீனவரணி தங்கமணி, பகுதி செயலாளர்கள் மாதவன், வெங்கட்ராமன், கந்தன், வக்கீல் பாலகிருஷ்ணன், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் பிரவீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதில் ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி. ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், டி.எஸ்.ஆர். மதிவாணன், அண்ணா தொழிற்சங்கம் பாலகிருஷ்ணன், பேரவை நிர்வாகி ஆறுமுகம், வர்த்தக பிரிவு வரதராஜன், மாமன்ற உறுப்பினர் தஷ்ணா, இலக்கிய அணி ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி தமிழ்ச்செல்வன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல் செய்ய முயற்சி

தொடர்ந்து அவர்கள் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) விஜிகுமார், கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அவர்கள் சிக்னல் பகுதிக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை மூத்த நிர்வாகிகள் தடுத்து, திருப்பி அழைத்தனர். பிறகு தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதை அறிந்த போலீசார் மீண்டும், முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், நீங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் உங்கள் கோரிக்கைகளை நேரில் சென்று தெரிவிக்குமாறு கூறினர். இதை ஏற்ற அ.தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்