மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லையில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை அறிவித்த தி.மு.க அரசை கண்டித்தும், மின்கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் அ.தி.மு.க.வினர் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், "மின்கட்டண உயர்வால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. அரசு உடனே மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.
மக்களை பற்றி சிந்திப்பதில்லை
அ.தி.மு.க. தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐ.எஸ்.இன்பதுரை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் மின்சார கட்டண உயர்வால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். கருணாநிதி ஆட்சி காலத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவருடைய மகன் தான் தற்போது ஆட்சி செய்கிறார். அவருடைய ஆட்சி மக்களைப் பற்றி சிந்திக்காமல் செயல்படுகிறது. இந்த ஆட்சியில் மின்சாரமே சரியாக இருப்பதில்லை. இருந்தாலும் 52 சதவீத மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பாடாய்படுத்துகிறது இந்த அரசு.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார்கள். அந்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? 500 யூனிட் பயன்படுத்துவோர் 55 சதவீதம் கூடுதலாக மின் கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின் கட்டணம், சொத்து வரி உயர்வின் மூலம் மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள். தி.மு.க.வினர் எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சியில் சட்டம்ஒழுங்கு சரியாக இல்லை.
நாடு முழுவதும் கனிம வள கொள்ளை அதிகரித்துள்ளது. குறிப்பாக ராதாபுரம், கூடங்குளம் பகுதியில் அதிகளவில் கனிம வளங்கள் முறைகேடாக எடுக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தி செல்லப்படுகிறது. இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கக்கூடிய கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். மக்களை பாதிக்கும் இந்த ஆட்சியை விரட்டும் பணியில் அ.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும்.
இவர் அவர் கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி.முத்துக்கருப்பன், அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம், நாராயணபெருமாள், இளைஞர் அணி செயலாளர் பால்துரை, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, பாசறை பொருளாளர் பாலரிச்சர்ட், வர்த்தக அணி செயலாளர் அம்மா செல்வகுமார், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன் (பாளையங்கோட்டை தெற்கு), விஜயகுமார் (நாங்குநேரி தெற்கு), அந்தோணி அமல்ராஜா (ராதாபுரம் மேற்கு), கே.பி.கே.செல்வராஜ் (ராதாபுரம் கிழக்கு), பகுதி செயலாளர் ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.