தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டினபிரவேசம்
தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். ஆதீன குரு முதல்வர் குரு பூஜையை முன்னிட்டு இந்த விழா நடக்கிறது.
விழாவின்போது தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் அமர வைத்து மடத்தை சுற்றி 4 வீதிகளிலும் அவரை தங்கள் தோளில் தூக்கி செல்வார்கள். அப்போது பக்தர்களுக்கு ஆதீனம் ஆசி வழங்குவார். 500 ஆண்டு காலமாக இந்த விழா நடந்து வருகிறது.
ஆர்ப்பாட்டம்
தருமபுரம் ஆதீனத்தை தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்வதை தடை செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இதில், தமிழ் மண் தண்ணுரிமை இயக்க அமைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வக்கீல் வேலு குணவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
50 பேர் கைது
இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை போலீசார் 2 வேன்களில் ஏற்றி குத்தாலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தருமபுர ஆதீனத்தில் பட்டினப்பிரவேச விழா முடியும் வரை கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.