மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி தாயுடன் விவசாயி தர்ணா

மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி தாயுடன் விவசாயி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2023-06-05 19:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா முத்தூர் அகரஆதனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மதன்மோகன் (வயது 35). விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் விவசாயக்கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கி உள்ளார். இந்த டிராக்டர்களை அந்த தனியார் நிறுவனம் ஜப்தி செய்து, அவருடைய கையெழுத்தையும் போலியாக போட்டு பெயரை மாற்றி மோசடி செய்ததாக கூறி போலீசாரிடம் மதன்மோகன் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கலெக்டர் மகாபாரதியிடம், மதன்மோகன் புகார் மனு அளித்தார். இந்த புகார் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் கடந்த மார்ச் மாதம் தனியார் நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவர்களை கைது செய்யவில்லை என கூறி மதன்மோகன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனது தாயார் உமாமகேஸ்வரியுடன் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு சென்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 பேரையும் விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்து, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்