விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தக்கோரி சேலத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்டக்குழு சார்பில் விவசாய தொழிலாளர்களுக்கு என தனி துறையை உருவாக்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணபதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் உதயகுமார், மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, மாவட்ட துணைச்செயலாளர் தங்கவேல் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து கிராமப்புற விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட நிதியை கட்டிடம், சாலை அமைப்பு, பாலம் போன்ற கட்டுமான பணிகள் செய்யாமல் தொழிலாளர்களின் கூலிக்கு பயன்படுத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் விண்ணப்பித்த அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.