கவர்னரை திரும்ப அழைக்க கோரி சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் ஆர்ப்பாட்டம்
கவர்னரை திரும்ப அழைக்க கோரி ஓசூரில் சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்ட மற்றும் ஓசூர் மாநகர சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில், தமிழக கவர்னரை, மத்திய அரசு திரும்ப அழைக்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் காமராஜ் காலனியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாநில பொருளாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இளைஞரணி மாநில தலைவர் ஜெகதீஷ் வரவேற்றார். இதில், தலித் விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர் செங்கோட்டையன், சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிறுவனர் இளவரசன், ஐ.பி.எப். மாநில அமைப்பாளர் ராகவராஜ், சி.பி.ஐ.எம்.எல். மாநிலக்குழு உறுப்பினர் சித்தானந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கல்பனா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் தலித் விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர் செங்கோட்டையன் கூறுகையில், கந்துவட்டி விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பா.ஜ.க. ஆட்சியில், பொருளாதாரம் மிகவும் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கிறது என்று கூறினார். அப்போது, மாநில இணை செயலாளர் சகுந்தலா, தலைமை நிலைய செயலாளர் மூர்த்தி, மண்டல செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.