35 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

நாகர்கோவிலில் 35 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

Update: 2022-11-08 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் 35 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு வீடுகள்

நாகர்கோவில் ஒழுகினசேரி பண்ட் பகுதியில் இருந்து பறக்கை இரட்டை குளம் வரை பறக்கின்கால் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் இரு கரைகளிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. எனவே அவற்றை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி முதற்கட்டமாக 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

எனினும் கோட்டார் ரெயில் நிலையம் அருகே சக்திநகர், குளத்தூர், சுலைமான்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு வீடுகள் இருந்தன. எனவே அவற்றையும் அகற்ற பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் கோட்டார் ரெயில் நிலையம் அருகே சக்திநகர் 1-ல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. ஏற்கனவே நோட்டீசு வழங்கப்பட்டு இருந்ததால் வீடுகளில் வசித்து வந்த மக்கள் அதை காலி செய்து விட்டனர். அதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலமாக வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. சக்திநகர் 1-ல் 10 வீடுகளும், சக்திநகர் 2-ல் 25 வீடுகளும் என மொத்தம் 35 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும்போது எந்த விதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்