130 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

நாகர்கோவில் பறக்கின்கால் கால்வாயில் 130 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

Update: 2022-12-19 18:45 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவில் பறக்கின்கால் கால்வாயில் 130 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றம்

நாகர்கோவில் பழையாற்றில் ஒழுகினசேரி பண்டு பகுதியில் இருந்து பிரியும் பறக்கின்கால் கால்வாயானது பறக்கை பெரியகுளம் வரை செல்கிறது. இந்த கால்வாயில் இருபுறங்களும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து பறக்கின்கால் கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றினர். அந்த வகையில் இதுவரை மொத்தம் 388 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. வீடுகள் இடிக்கப்பட்டதால் அங்கு வசித்து வந்த பொதுமக்கள் அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்துக்கு இடம் பெயர்ந்தனர்.

இதற்கிடையே பறக்கின்கால் கால்வாயில் குளத்தூர் பகுதியில் சுமார் 130 வீடுகள் ஆக்கிமித்து கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீசு அனுப்பினர். இதையடுத்து பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டனர்.

காங்கிரீட் வீடுகள்

இந்த நிலையில் குளத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரம் மூலமாக ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ஒரு சில வீடுகளில் பொதுமக்கள் குடியிருந்தனர். அவர்கள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.

ஏராளமான குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் இடிக்கப்பட்டன. மேலும் ஆக்கிரமிப்பு பகுதியில் கான்கிரீட் வீடுகளும் இருந்தன. அவையும் பொக்லைன் எந்திரம் மூலமாக இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் குளத்தூர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்