இருகையூர்-மைக்கேல்பட்டி இடையே தரமான தார்சாலை அமைக்க கோரிக்கை

இருகையூர்-மைக்கேல்பட்டி இடையே தரமான தார்சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-22 18:29 GMT

தா.பழூர்:

மண்சாலை

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் இருந்து இருகையூர் செல்லும் சாலையில் 2-வது கிலோ மீட்டரில் சாலையின் வலது புறம் வண்டிப்பாதை உள்ளது. இந்த வண்டிப்பாதையில் சென்றால் தா.பழூர்-விளாங்குடி சாலையில் உள்ள சிந்தாமணி ஊராட்சிக்கு உட்பட்ட மைக்கேல்பட்டி கிராமத்தை சென்றடையலாம். இந்த பகுதியில் தற்போது சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் மானாவரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துகளும், உளுந்து, பயறு, மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களும், சம்பங்கி பூ, சாமந்திப்பூ, மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மானாவாரி பயிராக பல்வேறு விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களது வயல்களில் ஆழ்துளை கிணறுகள் மூலமும் நீராதாரத்தை உருவாக்கி வைத்திருப்பதன் காரணமாக, ஆண்டு முழுவதும் விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் இப்பகுதி அமைந்துள்ளது. இந்த வயல்களுக்கு விவசாய பணிகளுக்காக விதை, உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச்செல்வதற்கு காரைக்குறிச்சி - இருகையூர் சாலையில் இருந்து தா.பழூர்- விளாங்குடி சாலை வரையில் உள்ள சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் சாலையே உள்ளது.

மிகுந்த சிரமம்

பல்வேறு விவசாய தொழில்நுட்ப வளர்ச்சிகளை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் மிகச் சிறப்பாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போக்குவரத்துக்கு ஏற்ற தார் சாலை இல்லாததால் மழைக்காலங்களில் இப்பகுதியில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும் விவசாய பொருட்களை எடுத்துச் செல்வதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் மூலமாகவோ அல்லது டிராக்டர்களிலோ எடுத்துச் செல்லப்படும் விவசாய பொருட்களை மண் சாலை உள்ள பகுதி வரையே கொண்டு செல்ல முடிகிறது.

பின்னர் மண் சாலை தொடங்கும் இடத்தில் இருந்து விவசாயிகளின் வயல் வரை உரம் உள்ளிட்ட அனைத்து இடுபொருள்களையும் தலையில் சுமந்தபடி சேறும், சகதியுமான மண் சாலையிலேயே எடுத்துச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. எனவே இருகையூர்-மைக்கேல்பட்டி இடையே உள்ள 5 கிலோ மீட்டர் மண் சாலையில் மெட்டல் சாலை அமைத்து அதன் மேல் தரமான தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தலையில் சுமந்து செல்லும் நிலை

இது குறித்து காரைக்குறிச்சி விவசாயி செல்வமணி கூறுகையில், இப்பகுதியில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம். எனக்கு நினைவு தெரிந்த காலமாகவே இப்பகுதி மண் சாலையாகவே அமைந்துள்ளது. இதனை தார் சாலையாக மாற்றித் தருமாறு சுமார் 20 ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும்.

விவசாயி சக்கரவர்த்தி கூறுகையில், விதை மற்றும் இடுபொருட்களை எடுத்துச் செல்வதற்கும், விளைந்த தானியங்களையும், விளை பொருட்களையும் எடுத்துச் செல்வதற்கும் இந்த மண்சாலை போதுமானதாக இல்லை. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறுவதால், எங்களால் இடுபொருட்களை எடுத்துச் செல்ல முடியாத சிக்கலான சூழ்நிலை உருவாகிறது. இதனால் விவசாயிகள் குறைந்தது 2 அல்லது 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தலையில் அவற்றை சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது, என்றார்.

கோரிக்கை

விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், மண்சாலையில் விளை பொருட்களை மூட்டை, மூட்டையாக ஏற்றிச் செல்லும் போது பலமுறை டிராக்டர்கள் மண்ணில் சிக்கிக் கொள்வது உண்டு. அப்போது போராடி அவற்றை மீட்டு எடுத்துச் செல்லும்போது மனம் சலித்து போகிறது. எங்கள் பகுதி விவசாயிகளின் நியாயமான இந்த கோரிக்கையை இதுவரை எந்த அதிகாரியும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு முன்வரவில்லை, என்றார்.

மேலும் விவசாயத்திற்கு ஏற்பட்டு வரும் பல்வேறு கடுமையான சோதனைகளை கடந்து தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கையை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்