தேனி அருகே வாலிபரை கைது செய்யக்கோரி போலீஸ் ஜீப்பை சிறைபிடித்து போராட்டம்

தேனி அருகே தகராறு செய்த வாலிபரை கைது செய்யக்கோரி போலீஸ் ஜீப்பை சிறைபிடித்து போராட்டம் நடத்திய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2022-06-04 14:20 GMT

தகராறு

தேனி அருகே வடபுதுப்பட்டி கூர்மையா கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 35). இவர் தனது உறவினர் செல்வக்குமாருடன் (25), ஒரு மோட்டார் சைக்கிளில் தேனிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

வடபுதுப்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் கார் தெருவில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரை எடுத்து வழிவிடுவது தொடர்பாக செல்வக்குமார், முருகேசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஒரு தரப்பில் செல்வக்குமார் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். மற்றொரு தரப்பில் புவனேஸ்வரி என்பவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். இதில், செல்வக்குமார் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிறைபிடிப்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தபோது, சிலர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப்பை சிறைபிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வக்குமாரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் இந்த சிறைபிடிப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

சுமார் 2 மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. பின்னர் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் உள்பட 6 பேர் மீதும், புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் செல்வக்குமார் மீதும் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போலீஸ் வாகனத்தை சிறை பிடித்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமுத்து கொடுத்த புகாரின் பேரில், 10-க்கும் மேற்பட்டவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வடபுதுப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்