தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை தர தாமதம்: பாரத ஸ்டேட் வங்கிக்கு கொ.ம.தே. கட்சி கண்டனம்

தேர்தல் பத்திரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனநாயக விரோதமானதென்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருந்தது.

Update: 2024-03-07 11:24 GMT

சென்னை,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ. ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"தேர்தல் பத்திரம் மசோதாவை பாரதிய ஜனதா கட்சியினுடைய ஒன்றிய அரசு தன்னிச்சையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போதே அனைவரும் எதிர்த்தோம். அந்த மசோதா ஜனநாயக விரோதமானதென்று நாடு முழுவதும் விமர்சனம் செய்தார்கள்.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியுனுடைய தலைவர்களும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கின்ற வலதுசாரி ஆதரவாளர்களும் தேர்தல் பத்திரம் மசோதாவை தாங்கி பிடித்தார்கள். வெளிப்படை தன்மை இல்லாமல் ஒரு அரசியல் கட்சி நன்கொடை வாங்குவதையே நியாயப்படுத்தினார்கள்.

இன்றைக்கு உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனநாயக விரோதமானதென்று தீர்ப்பளித்திருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில், தேர்தல் பத்திரங்கள் விற்ற பாரத ஸ்டேட் வங்கி, யார் வாங்கினார்கள், யாருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்ற விபரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டுமென்று உத்தரவிட்டது.

ஆனால் பாரத ஸ்டேட் வங்கி அந்த விபரங்களை கொடுப்பதற்கு 140 நாட்கள் ஆகுமென்று தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. அதுவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டு இரண்டு வாரங்கள் கழித்து நீதிமன்றம் கெடு விதித்த கடைசி நாளில் இதை செய்திருக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி நினைத்தால் ஒரே நாளில் அந்த விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திட முடியும். டிஜிட்டல் இந்தியா என்ன ஆனது என்ற ஒவ்வொரு இந்திய குடிமகனும் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். தேர்தல் முடியும் வரை இந்த விபரங்கள் வெளிவந்து விடக்கூடாது என்பதிலே பாரத ஸ்டேட் வங்கியும், பின்னணியில் இருந்து அதை இயக்குகிறவர்களும் யோசிப்பது வெளிப்படையாக தெரிகிறது.

தேர்தலுக்கு முன்னால் இந்த விபரங்கள் இந்திய மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று நினைப்பதிலிருந்தே தவறு நடந்திருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. இதை உச்ச நீதிமன்றமும் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. விரைவில் நாட்டு மக்களுக்கு உண்மைகள் தெரிய வரும். மக்களை ஏமாற்ற நினைக்கின்ற பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்