லஞ்ச வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பதை ஏற்க முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
லஞ்ச வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தாமதிப்பதை ஏற்க இயலாது என்றும், தாமதத்திற்கான காரணத்தை விளக்குவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் வருகிற 7-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
லஞ்ச வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தாமதிப்பதை ஏற்க இயலாது என்றும், தாமதத்திற்கான காரணத்தை விளக்குவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் வருகிற 7-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
லஞ்ச வழக்கு
மதுரையை சேர்ந்தவர் முனீர் அகமது. அரசு ஊழியர். கடந்த 2017-ம் ஆண்டு இவர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி ஏற்கனவே 2017-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீதான வழக்கில் 4 மாதத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவிட்டார்.
விரைவான விசாரணை
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மக்களின் நலனுக்காக ஊழல் வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது குறித்து ஒவ்வொரு நாளும் நீதிமன்றங்களும், அரசுகளும் கருத்து தெரிவிக்கின்றன. அதனால் தான் கோர்ட்டில் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விரைவில் விசாரணையை முடிக்கும்படி உத்தரவிடப்படுகிறது. ஆனால் லஞ்ச வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு போலீசார் கடும் தாமதம் செய்கின்றனர்.
குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிப்பது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரின் வேலை. சமூக நலன் கருதியும், சாட்சிகள் நினைவு பிறழாமல் இருக்கவும் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது அவசியம்.
தாமதத்தை ஏற்க முடியாது
பல வழக்குகளில் விசாரணை தொடங்குவதற்கு முன்பே சாட்சிகள் இறந்து விடுகின்றனர். அரசு ஊழியர் மீது பணியில் இருக்கும் போது லஞ்ச வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அவர் ஓய்வு பெறும் நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. ஓய்வு பெற்ற பிறகு விசாரணை தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தால் பிழைப்பூதியம் பெற்றுக்கொண்டு சுதந்திரமாக நடமாடுகிறார்.
இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது. எனவே லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர் வருகிற 17-ந் தேதி இந்த கோர்ட்டில் நேரில் அல்லது வீடியோ கான்பரன்ஸ் வழியாக ஆஜராகி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான தாமதத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.