தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள்; வயலில் இறங்கி பெண்கள் போராட்டம்

முதுகுளத்தூர் அருகே தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களால் வேதனை அடைந்த பெண்கள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்

Update: 2022-12-21 18:45 GMT

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களால் வேதனை அடைந்த பெண்கள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

தண்ணீர் இல்லை

முதுகுளத்தூர் அருகே உள்ள கீரனூர் வைத்தியனேந்தல் மேல பண்ணை குளம், கீழபண்ணைக்குளம், நல்லூர், ஆனைசேரி, மேலகன்னிசேரி, தூவல் செல்வநாயகபுரம் உள்ளிட்ட முதுகுளத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான மானாவாரி நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுதொடர்பாக இழப்பீடு வழங்க கோரி கீரனூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள், வயலில் இறங்கி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைகை நீர் பாசன வசதிக்கு திறந்து விடப்பட்டுள்ள நிலையில் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் முறையாக நீர் வரத்து கால்வாய் முறையாக தூர்வாரி சீரமைக்கப்படாததால் கண்மாய், குளம், ஏரிகள் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. நடப்பாண்டு பகுதி விவசாயிகள் மானாவாரி பயிரான நெல், மிளகாய், பருத்தி, உளுந்து, பாசி, சோளம், மக்காச்சோளம் பயிர்களை சாகுபடி செய்து பருவ மழைக்காக காத்திருந்தனர்.

போராட்டம்

இந்தநிலையில் பருவ மழை முறையாக பெய்யாததாலும், திறந்து விடப்பட்ட வைகை நீர் வந்து செல்லாததாலும், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி கருகின.

இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், பெண்கள் இழப்பீடு வழங்க கோரி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருகிய நெற்பயிர் காணப்படும் வயல்களில் இறங்கி அழுது ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்