1,114 என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பட்டம்

விழுப்புரத்தில் 1,114 என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி பட்டம் வழங்கினார்.

Update: 2022-11-04 18:45 GMT

விழுப்புரம்:

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளான விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி, ஆரணி, காஞ்சீபுரம் ஆகிய 5 பொறியியல் கல்லூரிகளில் 2017-2021-ம் ஆண்டு பட்டம் முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று காலை விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு 1,114 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழை வளர்க்கவில்லையா?

தமிழுக்காக என்றைக்கும் குரல் கொடுத்துக்கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி மட்டும்தான். ஆங்கிலத்தில் உள்ள அனைத்துத்துறை புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்த்து புத்தகம் வெளியிட தமிழ் வளர்ச்சித்துறைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாணவர்கள் தமிழில் படித்து பிறகு ஆங்கிலத்தில் படிக்கும்போது, அந்த பாடங்களை மிக எளிதாக புரிந்துகொள்ள முடியும். இப்படியெல்லாம் நாங்கள் தமிழை வளர்க்கவில்லையா? திராவிட மாடல் ஆட்சி இல்லை என்று சொன்னால் தமிழை எப்போதே ஒழித்திருப்பார்கள்.

பொறியியல் படிப்புகளில் வரும் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு 1, 2-வது செமஸ்டர்களில் தமிழ் பாடங்கள் இடம்பெறும். தமிழர் மரபுகள், அறிவியல் தமிழ் என்ற 2 பாடப்புத்தகங்கள் சேர்க்கப்பட்டு தேர்வுகள் நடக்கும். தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள் என்று கூறுகிறார்கள். எங்களைவிட யாரும் தமிழ் வளர்ச்சிக்கு திட்டங்களை செயல்படுத்தியது கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி மற்றும் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்