கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்படும் - ஐகோர்ட்டில், சி.எம்.டி.ஏ., உத்தரவாதம்
புதிய பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் வசதிகள் வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.;
சென்னை,
சென்னை கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் வசதிகளை செய்து கொடுக்கவேண்டும். அங்குள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் ஏற்கனவே பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை ஆய்வு செய்த தணிக்கைக்குழுவின் அறிக்கையில் பஸ் நிலைய கட்டிடங்களை அணுகுவதற்கு வழிகாட்டி பலகைகள் இல்லை. கட்டிடங்களுக்குள் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லும் வகையில் சாய்வுதளப்பாதைகள் இல்லை. சக்கர நாற்காலிகள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு குறைபாடுகள் உள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை'' என்று வாதிடப்பட்டது.
அப்போது சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.,) தரப்பி்ல், ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ள 17 குறைபாடுகளி்ல் 7 குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டு விட்டது. எஞ்சிய 10 பணிகளுக்கான டெண்டர் 2 மாதங்களில் அறிவிக்கப்படும், என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த பணிகளை திட்டமிட்டபடி முடித்து அதுதொடர்பான அறிக்கையை மார்ச் 25 ந்தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.