நூறு ஏக்கர் நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய மான், காட்டுபன்றிகள்:கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு

கயத்தாறு பகுதியில் மான், காட்டுபன்றிகளால் சேதமடைந்த பயிர்களைசகலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2022-12-02 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு பகுதியிலுள்ள 20 கிராமங்களில் மான், காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

பயிர்கள் சேதம்

கயத்தாறு மற்றும் சுற்று வட்டார கிராமங்களான வில்லிசேரி, இடைசெவல், சிவஞாபுரம், ஆசனூர் தளவாய்புரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த விலை நிலங்களில் அடிக்கடி மான்களும், காட்டுப்பன்றிகளும் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர். தற்போது இப்பகுதியில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தன. இந்தநிலையில், கடந்த சிலநாட்களுக்கு முன்பு இரவில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் புகுந்து மான்களும், காட்டு பன்றிகளும் பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.

கலெக்டர் ஆய்வு

இதை அறிந்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பயிர்கள் சேதமடைந்த விளைநிலங்களை பார்வையிட்டார். அப்போது விவசாயிகள் கூறுகையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மான், காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை வனத்துறையினர் மூலம் கட்டுப்படுத்தி நிம்மதியாக விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய கலெக்டர், கோரிக்கைள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கலெக்டருடன் வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், உதவி இயக்குனர் சுரேஷ், கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்