பத்திரப்பதிவு, நகராட்சி, ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

தமிழகத்தில் பத்திரப்பதிவு, நகராட்சி, ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 60 இடங்களில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-03-16 00:27 GMT

சென்னை,

தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

60 இடங்களில் சோதனை

மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதுமே அரசு அலுவலகங்களின் கடமை. ஆனால் சில ஊழியர்களின் இதுபோன்ற தவறான நடவடிக்கையால் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

தவறு செய்பவர்களை கண்டறியவும், அவர்களை கையும், களவுமாக பிடிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி, லஞ்ச பேர்வழிகளை கைது செய்து வருகிறது. தொடர்ந்து புகார்கள் அதிக அளவில் வந்தன.

இதனால் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களிலும், சோதனை சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

12 துறைகள்

இதில் பணப்புழக்கம் அதிகம் இருப்பதாக கருதப்படும் வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்து துறை (ஆர்.டி.ஓ. அலுவலகம்), உள்ளாட்சித்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட 12 துறைகளின் அலுவலகங்களை குறிவைத்து அதிரடி சோதனை நடந்தது.

பெரும்பாலும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகுதான் லஞ்சப்பணம் அதிகம் கைமாறுவதாக கருதப்படுகிறது. இதனால் நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்த சோதனையில் நூற்றுக்கணக்கான லஞ்ச ஒழிப்பு துறையினர் களம் இறங்கினர்.

ஜன்னல் வழியாக வீசினர்

பல இடங்களில் போலீசார் வருவதை பார்த்ததும், சிலர் வாங்கி வைத்திருந்த லஞ்சப்பணத்தை ஜன்னல் வழியாக வீசி எறிந்ததை பார்க்க முடிந்தது.

அவற்றை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு துறையினர், உடனடியாக அலுவலகங்களின் கதவுகளை பூட்டி, யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை.

சென்னை

சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் வர்ணிகாஸ்ரீ தலைமையில் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த ஊழியர்கள் கணக்கில் வராத பணத்தை வெளியே தூக்கி வீசி எறிந்தனர். அங்கு பணியில் இருந்த சோதனை சாவடி இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் ஊழியர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 200 சிக்கியது. திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு கட்டும் திட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.80 ஆயிரம் சிக்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் மலா்கொடி தலைமையில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.

காஞ்சீபுரம் மாநகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை பல மணி நேரமாக நீடித்தது.

ரூ.8¼ லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கணக்கிட்டபோது ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்து 440 இருந்தது. தொடர்ந்து இந்த பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல செய்யாறு சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

தங்க நாணயம், பணம்

ஈரோடு சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் உள்ள போக்குவரத்து சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.15 ஆயிரமும், தாரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.27 ஆயிரமும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.37 ஆயிரமும் சிக்கியது. நாமக்கல் மின்வாரிய அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்திலும் நேற்று மாலை சோதனை நடந்தது. இதில் அதிகாரிகளின் கார்களில் சோதனை செய்தபோது, தியாகராஜன் என்ற அதிகாரியின் காரில் இருந்து ரூ.1 லட்சமும், அலுவலகத்தில் ரூ.42 ஆயிரமும், ஒரு தங்க நாணயமும் சிக்கியது.

நாகர்கோவில், திருப்பூர்

இதேபோல் நாகர்கோவில் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.17 ஆயிரத்து 853 பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் நெருப்பொரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் ரூ.50 ஆயிரமும், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.2 லட்சமும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இதேபோல் தேனி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

நெல்லை, திருச்சி

நெல்லை டவுன் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.62 ஆயிரம் சிக்கியது. இதேபோல் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகம், கரூர் மாவட்டம் தரகம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி தென்னூர் மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.13,700 சிக்கியது. திருச்சி புள்ளம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வேட்டை நடந்தது.

கோவை, தஞ்சை

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் சோதனையில் ரூ.60 ஆயிரமும், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.13,500-ம், நீலகிரி மாவட்டம் குன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500-ம் சிக்கியது.

இதேபோல் தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு, கும்பகோணம் வணிக வரித்துறைக்கு சொந்தமான நடமாடும் வாகனம், நாகை தாலுகா அலுவலகம், திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கடலூரில் ரூ.5 லட்சம் சிக்கியது

கடலூரை பொறுத்தவரை மாநகராட்சி அலுவலகம் மற்றும் 4 கட்டுமான நிறுவனம் உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. மாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.

இதேபோல் கடலூர் மாநகராட்சியில் ரூ.5 லட்சம் சிக்கியது.

இவ்வாறு தமிழகம் முழுவதும் 60 இடங்களில் நேற்று அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அரங்கேற்றிய இந்த அதிரடி சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்