உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்த முடிவு

கூடலூரில் உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

Update: 2022-06-26 13:00 GMT

கூடலூர், 

கூடலூரில் உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

உழவர் சந்தை

கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த 2011-ம் ஆண்டு ரூ.24 லட்சம் செலவில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. அங்கு 20 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தொடக்க காலத்தில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதனால் பொதுமக்கள், கேரள வியாபாரிகள் தினமும் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.

நாளடைவில் பொதுமக்கள் வருகை குறைந்தது. இதனால் போதிய வியாபாரம் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து கடைகளை காலி செய்தனர். இதனால் சில ஆண்டுகளாக உழவர் சந்தை செயல்படாமல் உள்ளது. இந்தநிலையில் வேளாண் விற்பனை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இணைந்து உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்து உள்ளனர்.

விவசாய குழுக்களிடம் ஆலோசனை

இதைத்தொடர்ந்து விவசாய குழுக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் வேளாண் விற்பனை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி கூடலூர் அருகே புளியம்பாறையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூடலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, வேளாண் விற்பனை துறை அலுவலர் கலைவாணி, துணை வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி அலுவலர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது அதிகாரிகளின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக விவசாய குழுவினர் உறுதியளித்தனர். இதேபோல் பல இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதுகுறித்து வேளாண் விற்பனை துறை அலுவலர்கள் கூறும்போது, கூடலூர் உழவர் சந்தையை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வேளாண் விளைபொருட்கள் மட்டுமின்றி ஆதிவாசி மக்களின் உற்பத்தி பொருள்களும் விற்பனை செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்