அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட தாயும் குழந்தையும் சாவு - கணவர் போலீசில் புகார்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட தாயும் குழந்தையும் உயிரிழந்த நிலையில் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.;

Update:2022-05-28 15:27 IST

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகர் நரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் ராஜா (வயது 29). இவர் இன்ஜினியரிங் படித்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்சமயம் ஊருக்கு வந்துள்ளார். இவருடைய மனைவி வைஜயந்தி (28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வைஜயந்தி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் வைஜயந்திக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் கணவர் ராஜா மற்றும் உறவினர்கள் வைஜயந்தியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவ நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சைக்கு சேர்த்த சிறிது நேரத்தில் காலை 10.30 மணிக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அதனைத்தொடர்ந்து வைஜயந்தி உடல்நிலை மோசமானதை மதியம் 1.30 மணி அளவில் டாக்டர்கள் உடனடியாக தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வைஜயந்தி தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் வைஜயந்தி சிகிச்சைக்கு சேர்த்த 2 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதுபற்றி ராஜா பட்டுக்கோட்டை நகர போலீசில் கொடுத்த புகாரில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர்களின் கவனக்குறைவு காரணமாகவே மனைவியும் குழந்தையும் மரணம் அடைந்தனர். மருத்துவர்கள், நர்சுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்