கோவை தங்கம் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-12 03:23 GMT

சென்னை,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் காலமானார். உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 74.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வால்பாறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கோவை தங்கம். அதன் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 2021ஆம் ஆண்டில் கோவை தங்கம் திமுகவில் இணைந்தார்.

கோவை தங்கம் உடல் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. கோவை தங்கம் மறைவுக்கு அரசியல்கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"வால்பாறை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் கோவை தங்கம் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மாற்றுக் கட்சியில் இருந்தபோதும், திமுகவில் இணைந்த பின்பும் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் கோவை தங்கம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்