உவரி அருகே அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் சாவு தம்பி மகன் வெறிச்செயல்
உவரி அருகே அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்
திசையன்விளை:
உவரி அருகே அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்.
முதியவர்
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள ராமன்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் மூக்கன் என்ற கணேசன் (வயது 70). இவர் ராமன்குடியில் உள்ள தன்னுடைய பூர்வீகமான இடத்தில் மகளுடன் வசித்து வந்தார்.
இவரது உடன் பிறந்த தம்பி மகன் நாகலிங்கம் என்ற பாக்கியராஜ் (35). இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அரிவாள் வெட்டு
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ராமன்குடிக்கு பாக்கியராஜ் வந்தார். அவர் தனது பெரியப்பாவிடம் தனக்கு வீடு கட்ட இடம் தருமாறு கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாக்கியராஜ் அரிவாளால் கணேசனை சரிமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் ரத்த வெள்ளத்தில் கணேசன் உயிருக்கு போராடினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பரிதாப சாவு
இந்த சம்பவம் குறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, கொலை முயற்சி வழக்கில் பாக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உவரி அருகே அரிவாள் வெட்டில் காயம் அடைந்த முதியவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.