மத்தூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; அரசு பஸ் கண்டக்டர் சாவு

Update: 2023-06-30 19:45 GMT

மத்தூர்

மத்தூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார்.

அரசு பஸ் கண்டக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெரமகவுண்டனூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). இவர் ஊத்தங்கரை அரசு போக்குவரத்து கழக கிளையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் மத்தூர் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் ராமலிங்கம் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போலீசார் விசாரணை

ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு நபர் லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராமலிங்கத்திற்கு ஒரு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அவர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் செய்திகள்