தர்மபுரி அருகே கிணற்றில் மூழ்கி நகைக்கடை ஊழியர் சாவு

தர்மபுரி அருகே நகைக்கடை ஊழியர் கிணற்றில் மூழ்கி இறந்தார்.

Update: 2023-06-09 19:30 GMT


நகைக்கடை ஊழியர்

தர்மபுரி அருகே உள்ள சோகத்தூரை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 27). நகைக்கடை ஊழியர். இவர் தர்மபுரியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். சம்பவத்தன்று அஜித்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கிணற்றுக்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றின் அருகே அவருடைய துணிகள், செல்போன் மற்றும் ஸ்கூட்டர் சாவி ஆகியவை இருந்தன. ஆனால் அவரை காணவில்லை. இதனால் அவர் கிணற்றில் மூழ்கி இறந்து இருக்காலம் என சந்தேகம் ஏற்பட்டது.

கிணற்றில் மூழ்கி சாவு

இதுகுறித்து அவர்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி அஜித்குமாரை தேடினர். அப்போது அவர் கிணற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

அப்போது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் போலீசார் அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்