திருமணமாகாமல் கர்ப்பமான சிறுமி பிரசவத்திற்கு பின் திடீர் சாவு

வாழப்பாடியில் திருமணமாகாமல் கர்ப்பமான சிறுமி, குறை மாதத்தில் குழந்தையை பிரசிவித்த சிறிது நேரத்திற்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு பிரசவ சிகிச்சை அளித்த பெண் டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-07 20:02 GMT

வாழப்பாடி

வாழப்பாடியில் திருமணமாகாமல் கர்ப்பமான சிறுமி, குறை மாதத்தில் குழந்தையை பிரசிவித்த சிறிது நேரத்திற்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு பிரசவ சிகிச்சை அளித்த பெண் டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

17 வயது சிறுமிக்கு பிரசவம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன், இந்திராநகரை சேர்ந்த அந்த சிறுமியின் உறவினரான ஒரு வாலிபர் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சிறுமி கர்ப்பமானார்.

இது பெற்றோருக்கு தெரியவந்ததால், தனது மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிட்டு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து உள்ளனர். வாழப்பாடியில் உள்ள டாக்டர் செல்வாம்பாள் ராஜ்குமார் என்பவரின் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிறுமியை நேற்று முன்தினம் இரவு அழைத்துசென்றுள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் செல்வாம்பாள், 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டதால், கருவை கலைக்க முடியாது என்பதால், பிரசவ முறையில் சிகிச்சை அளித்து, சிறுமியின் வயிற்றில் இருந்த குறை மாத குழந்தையை பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த சிறுமிக்கு அங்கு பிரசவம் நடந்தது. அதில் அந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்திற்கு பின்பு குழந்தை கண் விழிக்காததால் இறந்து விட்டதாக கருதி அந்த பச்சிளம் பெண்குழந்தையை அங்கிருந்த பிளாஸ்டிக் தொட்டியில் ஆஸ்பத்திரி பணியாளர்கள் வீசி விட்டதாக கூறப்படுகிறது.

சாவு

இந்த நிலையில், குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அந்த சிறுமியை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக டாக்டர்கள் வாழப்பாடி போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சேலம் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ஜெயசெல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், பெண் டாக்டர் செல்வாம்பாளிடம் ேநற்று காலை 6 மணிக்கு விசாரணை நடத்தினர்.

பெண் டாக்டர் மீது புகார்

இதையடுத்து, திருமணமாகாத 17 வயது சிறுமிக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரசு தலைமை டாக்டர் ஜெயசெல்வி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு, பிரசவம் பார்த்த பெண் டாக்டர் மீதும், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபர் மீதும் நடவடிக்கை எடுக்க வாழப்பாடி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உமாசங்கர், தனலட்சுமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

திருமணமாகாமல் கர்ப்பமான 17 வயது சிறுமி குறைமாதத்தில் குழந்தையை பிரசவித்த சில மணி நேரத்தில் திடீரென பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்