12 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி டிரைவர் திடீர் சாவு
ஓசூர் அருகே லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த டிரைவர் திடீரென இறந்தார்.;
ஓசூர்
ஓசூர் அருகே லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த டிரைவர் திடீரென இறந்தார்.
டிரைவர் திடீர் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி பகுதியில் சாலையோரம் நீண்ட நேரமாக ஒரு லாரி நிறுத்தப்பட்டு, இருக்கையில் டிரைவர் அமர்ந்தபடி இருந்தார்.
இதனால் சந்தேகமடைந்த அந்த வழியாக சென்றவர்கள் லாரிக்கு அருகில் சென்று டிரைவரை அழைத்துள்ளனர். அப்போது, அவர் இறந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் லோகநாதன் (வயது50) என்பதும், அரிசி பாரம் ஏற்றி கொண்டு ஓசூர் நோக்கி வந்ததும் தெரியவந்தது. அவருக்கு வழியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு இருக்கையிலேயே இறந்தது தெரிந்தது.
12 டன் அரிசி பறிமுதல்
மேலும் லாரியில் இருந்தது ரேஷன் அரிசி என்பதும், கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், லாரி டிரைவர் லோகநாதனின், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் லாரி மற்றும் அதில் இருந்த 12 டன் அரிசியை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது?, இதை கடத்தியவர்கள் யார்? என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த லாரி மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதற்காக 3 வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.