கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் சாவு
கோட்டப்பட்டி அருகே ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
கோட்டப்பட்டி அருகே ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
கிணற்றில் பிணம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சின்ன வேலனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் கோபிகா (வயது17). பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் கோபிகா ஆடுகளை மேய்ச்சலுக்காக அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது நிலத்திற்கு ஓட்டி சென்றார். மாலை வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை. இதனிடையே நேற்று காலை கணேசனின் கிணற்றில் இளம்பெண் பிணமாக மிதந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கோபிகாவின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
போலீசார் விசாரணை
அப்போது அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் போலீசார், கோபிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆடுகள் மேய்க்க சென்ற போது கோபிகா கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.