விஷம் குடித்த காதலன் சாவு; காதலிக்கு தீவிர சிகிச்சை
மேலூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்த காதலன் பரிதாபமாக இறந்தார். காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலூர்,
மேலூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்த காதலன் பரிதாபமாக இறந்தார். காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதல்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தர்மசானப்பட்டி அருகில் உள்ள பாறையம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித்(வயது 23). பி.ஏ. படித்துள்ளார். அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர் காவியா (22). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து காதலர்கள் கீழவளவு போலீஸ் சரகம் கோட்டநத்தம்பட்டி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர்கள் 2 பேரும் விஷம் குடித்தனர். பின்னர் அங்கிருந்து பாறையம்பட்டியில் உள்ள அஜித்தின் வீட்டுக்கு வந்த அவர்கள், குடும்பத்தினரிடம் தாங்கள் விஷம் குடித்ததை கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விசாரணை
2 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அஜித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காவியா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.