மரம் ஏறி நாவல் பழம் பறித்த அரசு பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி பலி
மதிய உணவு இடைவெளியின் போது மரம் ஏறி நாவல் பழம் பறித்த அரசுப்பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
மானாமதுரை,
மதிய உணவு இடைவெளியின் போது மரம் ஏறி நாவல் பழம் பறித்த அரசுப்பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
நாவல் பழம் பறித்தனர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சீனிமடை கிராமத்தை சே்ாந்தவர், மருதுபாண்டி. இவருடைய மகன் மனோஜ் (வயது 13). இவர் கொம்புகாரனேந்தல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
மிளகனூர் கிராமத்தை சேர்ந்தவர், கந்தசாமி. இவருடைய மகன் விக்னேசுவரன் (15). அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
மனோஜ், விக்னேசுவரன் பள்ளிக்கு சென்றிருந்த நிலையில், மதிய உணவு இடைவெளியின்போது அவர்களும், மேலும் சில மாணவர்களும் சேர்ந்து பள்ளிக்கு வெளியே சென்று, சிறிது தூரத்தில் உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்தனர்.
மின்சாரம் தாக்கி பலி
இந்த மரத்தை தொட்டு மின்சார ஒயர் சென்றது. இதை கவனிக்காத மனோஜ், விக்னேசுவரன் நாவல் பழங்களை பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த மரக்கிளை முறிந்து மின்சார ஒயர் மீது விழுந்தது. இதில் ஒயர் மீது விழுந்த மனோஜ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேசுவரன் பலத்த காயம் அடைந்தார்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விக்னேசுவரனை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கலெக்டர் விசாரணை
இந்த சம்பவம் குறித்து அறிந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மானாமதுரை யூனியன் தலைவர் லதா,, ஒன்றிய தி.மு.க. செயலாளர் அண்ணாத்துரை ஆகியோர், மின்சாரம் தாக்கி பலியான மாணவர் மனோஜ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.