ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் செத்து மிதந்த மீன்களால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
செத்து மிதந்த மீன்கள்
ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஏரியில் அதிகளவில் மீன்கள் உள்ளன. இந்த மீன்கள் தற்போது செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பல நூற்றாண்டுகளாக இங்குள்ள ஏரி தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிப்பதற்கு உபயோகப்படுத்தி வந்தனர். மேலும், ஆடு, மாடுகள் குடிப்பதற்கும், பொதுமக்கள் குளிப்பதற்கும் உபயோகப்படுத்தி வந்தனர். இந்த ஏரிக்கு வரத்து வாய்க்காய் மூலம் இருந்து தண்ணீர் வருகிறது.
கடும் துர்நாற்றம்
இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி தண்ணீர் தற்போது உபயோகமற்ற நிலையில் மாறியுள்ளது. இதனால் தண்ணீர் மாசடைந்து வருவதால் மீன்கள் அடிக்கடி செத்து மிதக்கின்றன.
இதையடுத்து, ஊராட்சி சுகாதார பணியாளர்கள் வலை வைத்து தினமும் இறந்த மீன்களை குளத்தில் இருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் தண்ணீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.