விராலிமலை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
விராலிமலை தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதக்கிறது. எனவே இதனை சுத்தம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தெப்பக்குளம்
விராலிமலை-மதுரை செல்லும் சாலையில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளமானது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு விராலிமலை பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. அதன் பிறகு பருவமழை பொய்த்ததால் தெப்பக்குளமானது வறண்டது. இந்தநிலையில் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் இந்த தெப்பக்குளம் நிரம்பி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு குளம் நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அதனை கண்டு கழித்து வந்தனர். அவ்வாறு வரும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை அப்படியே குளத்திற்குள் வீசி செல்கின்றனர். இதனால் நீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
செத்து மிதக்கும் மீன்கள்
தெப்பக்குளத்தில் உள்ள நீரானது தொடர்ந்து மாசடைந்து வருவதால் அதில் உள்ள மீன்கள் ஆங்காங்கே செத்து மிதந்து வருகின்றன.
மேலும் தை மாதம் பூசம் மற்றும் வைகாசி விசாகத்தின் போது இந்த தெப்பக்குளத்தில் வெகு விமரிசையாக தெப்ப உற்சவம் நடைபெறும்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குளத்தை நேரில் ஆய்வு செய்து தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.