வீட்டின் முன்பு விளையாடியபோது 4 வயது சிறுமி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சாவு

Update: 2023-05-25 18:45 GMT

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே வீட்டின் முன்பு விளையாடிய போது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

மாலை கண் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஓட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. விவசாயி. இவருடைய மனைவி சந்தியா. இந்த தம்பதிக்கு கோமதி (வயது 4) என்ற மகள் இருந்தாள். இந்த சிறுமிக்கு மாலை கண் நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக சிறுமி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தாள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் கோமதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். திருப்பதி விவசாய தோட்டத்துக்கு சென்று விட்டார். அப்போது சந்தியா, சமையல் செய்வதற்காக வீட்டின் முன்பு இருந்த தரைமட்ட குடிநீர் தொட்டியில் குடத்தில் தண்ணீர் எடுத்து சென்றார். அவர் தண்ணீர் தொட்டியை மூடாமல் சென்று விட்டார்.

தண்ணீரில் மூழ்கி பலி

நேரம் ஆக ஆக விளையாடி கொண்டிருந்த சிறுமி கோமதிக்கு கண் பார்வை மங்க தொடங்கியது. இதனால் அவள் எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தாள். இதில் அவள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள். வீட்டுக்கு திரும்பிய திருப்பதி, மகளை காணாமல் அக்கம் பக்கத்தில் தேடினார். இரவு 8 மணி அளவில் தண்ணீர் தொட்டியில் சிறுமி பிணமாக மிதந்தாள்.

பெற்றோர் அவளை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் முன்பு விளையாடிய சிறுமி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்