லாரியில் இருந்து இறக்கிய போது கிரேன் பெல்ட் அறுந்தது எந்திரம் விழுந்து வடமாநில தொழிலாளி உடல் நசுங்கி சாவு; பெருந்துறை அருகே பரிதாபம்
பெருந்துறை அருகே லாரியில் இருந்து இறக்கிய போது கிரேன் பெல்ட் அறுந்ததில் எந்திரம் விழுந்து வடமாநில தொழிலாளி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
பெருந்துறை
பெருந்துறை அருகே லாரியில் இருந்து இறக்கிய போது கிரேன் பெல்ட் அறுந்ததில் எந்திரம் விழுந்து வடமாநில தொழிலாளி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
எந்திரம்
ஒடிசா மாநிலம் ஜாலப்பூர் மாவட்டம் காந்தாரா பகுதியை சேர்ந்தவர் மதுசூதன் சாய். அவருடைய மகன் பிஸ்வஜித் சாய் (வயது 21). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் தங்கியிருந்து விஜயமங்கலத்தில் இயங்கி வரும் தண்ணீர் குழாய் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மாலையில் அந்த நிறுவனத்துக்கு புதிதாக எந்திரம் ஒன்று லாரியில் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை லாரியில் இருந்து கீழே இறக்குவதற்கு கிரேன் ஒன்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
தொழிலாளி மீது விழுந்தது
இதைத்தொடர்ந்து அந்த எந்திரம் கிரேன் பெல்ட் மூலம் இணைக்கப்பட்டது. பின்னர் அதனை பிஸ்வஜித்சாய் உள்ளிட்ட சில தொழிலாளர்கள் லாரியில் இருந்து கீழே இறக்க முயற்சித்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் எந்திரத்தின் எடையை தாக்குப்பிடிக்க முடியாததால் கிரேன் பெல்ட் அறுந்தது. இதனால், கிரேனின் பிடியில் இருந்த எந்திரம் தரையில் நின்று கொண்டிருந்த பிஸ்வஜித் சாயின் மீது விழுந்தது.
இதில் அவர் உடல் நசுங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அங்கிருந்த சக தொழிலாளிகள், பிஸ்வஜித் சாயை உடனே மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிஸ்வஜித் சாய் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் விபத்துக்கு காரணமான கிரேன் ஆபரேட்டர் லோகேஸ்வரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.